ஓர் உரையாடல்

மூர்த்தி அண்ணன் நல்ல உயரம். நேர்த்தியான உடை அணிந்திருந்தார். சுற்றி எங்கும் இருள் சூழ்ந்துக்கொண்டிருக்க , பேருந்தின் விளக்கு வெளிச்சத்தில் தமது கதையை எங்களுடன் பகிர்ந்தார். சாதியை பற்றி பெரும்பான்மையாக வரலாற்றுப் பாடங்களில் மட்டுமே படித்த எங்களுக்கு, அவரது கதை அதிர்ச்சியும் வேதனையும் அளித்தது. ஆனால் எங்கள் மனங்களைக் கவர்ந்தது, அந்தச்சூழலிலும் அவரது வார்த்தைகளில் ததும்பிய பலமும் உறுதியுமே ஆகும்.

மூர்த்தி அண்ணன் ஒரு தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர். தமது சாதியைச் சேர்ந்த மற்ற இளைஞர்கள் சமுதாயச் சூழலினால், சிறு வயதிலேயே பறையடிக்கவோ, காட்டுவேலைக்கோ சென்றுவிட , தம் உழைப்பால் கல்லூரியில் பயின்றவர். அவரது தாய், தந்தை இருவரும் கூலிவேலை செய்பவர்கள். பள்ளிக்கு மேல் படிக்க வைக்க வீட்டில் பணமில்லை. எப்படியாவது மேற்படிப்புப் படிக்கவேண்டும் என்ற உந்துதல் மட்டுமே அவரிடம் இருந்தது. ஈரோட்டில் ஓரு கல்லூரியில் உதவித்தொகையின் மூலமே பயின்றார். மற்ற செலவுகளுக்கு சிறு சிறு பணிகள் செய்து பணம் சேமித்தார்.

அந்த கிராமத்தில் எவ்வாறு தினசரி வாழ்க்கையின் ஒவ்வொரு அங்கத்திலும் சாதியம் பிணைந்திருக்கிறது என்பதை எங்களுக்கு விவரித்தார். தாழ்த்தப்பட்ட மக்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை, அவர்கள் வசிக்கும் தெருக்களில் ஆதிக்க சாதியினரின் கால்தடம் கூட பதிவதில்லை , ஒருவேளை அவர்கள் ஆதிக்க சாதியினர் பயன்படுத்தும் பாத்திரங்களை தொட்டுவிட்டால், அது அவர்களுக்கே கொடுக்கப்படும் என்று அவர் அமைதியாக அடுக்கிக்கொண்டே போக, எங்களால் மிக்க வேதனைக்கொள்ள மட்டுமே முடிந்தது. தீண்டாமை என்பது இந்த யுகத்தில், அதுவும் தமிழ்நாட்டில் இவ்வளவு தூரம் ஊடுருவியிருக்கும் என்பதை உண்மையாக ஏற்கமுடியவில்லை.அப்போது என் மனதில் நின்றது, ‘தீண்டாமை பெருங்கொடுமை’ என்ற, இவ்வளவு காலமாக தமிழ்ப்பாட புத்தகங்களின் முதல் பக்கத்தில் நான் படித்த வாக்கியம் – அதற்கு என்ன பொருள் என்ற கேள்வியே மனதில் எழுந்தது.

அவர் கூறினார், ‘ முன்பெல்லாம் எங்களுக்கு தனியாக தேங்காய் தொட்டிகள் வைத்திருப்பர் , தண்ணீர் பருகுவதற்கு. இப்போது காகிதக் குவளை தருகின்றனர். தீண்டாமை நவீனமாகியிருக்கிறதே தவிர, ஒழியவில்லை’- அந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் சுள்ளென காதில் விழுந்தன. மூர்த்தியின் சொற்களில் சினம் தெரியவில்லை; ஒருவித ஆதங்கம் தான் மேலோங்கியிருந்தது.

ஈரோட்டில் வெளிச்சூழல் எப்படி சமத்துவமாக இருக்கிறது என்பதை கண்டவருக்கு, ஒரு தைரியம் பிறந்தது. ஆறு வருடத்திற்கு முன்பு, ஒருநாள் கிராமப் பால்சாவடியில் பால் வாங்கச் சென்றுவிட்டார். சட்டத்தின் படி, அரசு நடத்தும் அந்த சாவடியில் யார் வேண்டுமானாலும் பால் வாங்கலாம் என்றாலும், வழக்கமாக தாழ்த்தப்பட்ட மக்கள் வெளியில் நின்றே பால் வாங்குவர்; அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை. இவர் அன்றைக்கு உள்ளே சென்று பாலூற்ற கேட்டபோது, திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். தன்னுடைய அடிப்படை உரிமைக்காக அவர் வாதாட, ஆதிக்க சாதியினரால் தாக்கப்பட்டார். இதோடு கதை நிற்கவில்லை. இளைஞருக்கே உரித்தான உறுதியுடன், மீண்டும் ஒருமுறை உள்ளே சென்று பால் கேட்டபோது, தாக்கப்பட்டது மட்டுமல்லாமல், அவர் மேல் வழக்கும் பதிவு செய்யப்படுகிறது. எதிர்ப்பார்த்தது போல, அந்த வழக்கு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

எங்கோ செய்தித்தாள்களில் படித்த கொடூரச் சம்பவங்கள், உண்மையாகவே, இவ்வளவு அண்மையில் நடக்கின்றன என்பதை நம்பமுடியாமல் மனம் தவிக்க, இதயத்தை நொறுக்கும்படியான தகவல் தெரியவந்தது: இன்று வரை அந்த பால்சாவடிக்குள் தாழ்த்தப்பட்ட மக்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

இந்நிலையை அறிந்தவுடன், எங்கள் மனங்களில் ஆயிரம் கேள்விகள் எழுந்தன. ஏன் யாரும் இதை எதிர்க்கவில்லை? ஏன் இந்த நிலையில் வாழ்கிறார்கள்? உண்மையில் நாங்கள் சாதியத்தின் முழுமையான தாக்கத்தை அதன் வரை அறியவில்லை. அது எப்படி தாழ்த்தப்பட்டவர்களை அதுதான் நிதர்சனம் என்று எண்ண வைத்து , அதில் ஒருவித பாதுகாப்பையும் தேடச்செய்கிறது என்று அப்போது தான் உணர்ந்தோம். இதை புரியவைக்கும் வகையில் மூர்த்தி பல உதாரணங்களை முன்வைத்தார். முன்பு ஆதிக்க சாதியினரின் தெருக்களை கடக்கும் போது, இவர்கள் வேட்டி அணியக்கூடாது. இப்போது அப்படி இல்லையென்றாலும், பெரியவர்கள் அந்த வழக்கத்தை பின்பற்றிதான் வருகிறார்கள். அதுதான் நியதி என்று அவர்களை நம்ப வைத்து, தமக்கென்று தனிமனித உரிமைகள் இருக்கின்றன என்பதை அறியாமல் வாழ்க்கையை கடந்துவிடுகிறார்கள் என்ற கொடூரம் மனதை கலங்கவைத்தது.

மூர்த்தி அண்ணன் தனக்கு ஏற்பட்ட கடினங்களால் கூட வருத்தமடையவில்லை, தனது தாய் தந்தையரின் நிலையை பற்றி தான் மிகுந்த வருத்தத்திற்கு உள்ளாகிறார் என்று அவரது வார்த்தைகள் உணர்த்தின. பத்து வயது ஆதிக்க சாதி சிறுவன் தனது தந்தையை ‘வா, போ’ என ஏவுகிறான் என்று எங்களிடம் கூறும்போது, அவரது குரலில் வேதனை தோய்ந்திருந்தது. அந்த சம்பவத்தை திரும்பித்திரும்பி நினைவுக்கூறுவதின் மூலமே அது அவரை எவ்வளவு ஆத்திரமடைய செய்கிறது என்று பாராட்ட முடிந்தது.

மூர்த்தி அண்ணாவின் வாழ்க்கையில் உடைந்துப்போன கனவுகளே அதிகமாக இருந்தன. சட்டம் படிக்க மிகவும் விருப்பப்பட்டார்; விண்ணப்ப படிவங்களை எல்லாம் நிரப்பியிருந்தார். ஆனால் குடும்பத்தில் பொருளாதார சிக்கல்; உடனே ஏதாவது வேலைக்குச் செல்லவேண்டிய நிர்பந்தம். ஒரு புன்முறுவலுடன் அவர் இதை கூறினாலும், தனது கனவுகளை நோக்கி பயணிக்கமுடியாத அவரின் வருத்தத்தை அறியமுடிந்தது.

அவர் TNPSC தேர்வுக்குக் கூடப் படித்தார். பொருளாதார சூழல் அக்கனவையும் தகர்த்தது. தன்னால் கட்டுப்படுத்த முடியாத சில கூற்றுகளால் , ஒருவரின் வாழ்க்கை எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறது என்று நினைக்கும் போது, இந்த சமத்துவமின்மை எவ்வளவு கொடுமையானது என்று முழுமையாக உணரமுடிந்தது.

இவ்வளவு துயரங்களையும் கடந்துவரும் வலிமை அவருக்கு எப்படிக் கிடைத்தது என்பது, ஒரு சுவாரசியமான, நம்பிக்கை அளிக்கக்கூடிய கதை. அவரும் தன் தாய் தந்தையரை போல சாதியத்தை ஏற்றுக்கொண்டு, அச்சூழலியே வாழ்ந்துக்கொண்டிருந்தவர் தான். பத்தாம் வகுப்பு பயிலும்போது, ஒரு தோழர் அவருக்கு பெரியார் மற்றும் அம்பேத்கரின் புத்தகங்களை அறிமுகப்படுத்தினார். அதனால் மூர்த்தியின் வாழ்க்கையே மாறியது என்று சொன்னால் மிகையாகாது. சாதியின் மூலம் தாம் ஒடுக்கப்படுகிறோம், தம்மையும் மக்கள் மதிக்கவேண்டும் போன்ற கருத்துக்களை அறிமுகப்படுத்தி , அவருக்கு ஒரு புது கம்பீரத்தை அளித்தது இவ்விரண்டு தலைவர்கள் தாம். சாதியத்தை தகர்த்தெறிந்து வெளியில் வரவும் புதிய உத்வேகத்தை தந்தது அவர்களே.

பெரியாரைப் பற்றி பேசும்போது, மூர்த்தியின் முகத்தில் அப்படி ஒரு பரவசம். தன்னிடம் இன்று இருக்கும் எல்லாவற்றிற்கும் அவர் தான் காரணம் என்று நன்றியுணர்ச்சி தழுதழுக்க எங்களிடம் சொன்னார். பெரியாரை சமூகச் சீர்திருத்தவாதியாக ஒருக் கல்விச்சூழலின் மூலமே அறிந்த எனக்கு, அவரின் பணிகளின் முக்கியத்துவம் அளவிடமுடியாதது என்பது மூர்த்தியின் கதை மூலம் தெரிந்தது.

மூர்த்தி அண்ணாவின் வாழ்க்கை அவர் கண்ட துயரங்களால் மட்டுமே தீர்மானிக்கப்பட்டது என்று முடிவு செய்வது தவறாகும் . உண்மையில் அவர் தன் வாழ்க்கைப் பாதையை தன் அறிவு, உறுதி மற்றும் விவேகத்தைக் கொண்டு தாமே வடிவமைத்துக்கொண்டிருக்கிறார். ஒரு மருத்துவமனையில் வேலை செய்கிறார். பொருளாதாரச் சூழல் சற்றே தலைதூக்கியிருக்கிறது. முடிந்தளவு சேமித்தப்பிறகு, சென்னையில் குடிகொண்டுவிட விரும்புகிறார். தான் காதலித்தப் பெண்ணை சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டார்.

நாங்கள் மாணவிகள் என்பதாலோ என்னவோ, அந்த திருமணக் கதை எங்களை மிகவும் ஈர்த்தது. அவரது மனைவி சற்றே மேலிருக்கும் சாதியைச் சேர்ந்தவர்; அதனால், அவர்களின் வீட்டில் இந்தத் திருமணத்தை ஏற்கவில்லை. இருவரும் கோயிலில் சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டனர்.

ஏன் வேற்றுச் சாதிப் பெண்ணைத் தான் மணந்தீர்கள் என்று கேட்டதற்கு, சற்றும் யோசிக்காமல் உறுதியாக பதில் வந்தது : ‘சாதியை எதிர்த்துக்கொண்டு சாதித் திருமணம் செய்வது எப்படி சரியாகும்?’ அவரின் கொள்கையை – பின்பற்றும் குணம் எங்களை கவர்ந்து.

தான் பட்ட அவமானங்களை தன் மனைவி பட்டுவிடக்கூடாது என்று அவர்களைக் கிராமத்திற்கே கூட்டி வராததை அவர் குறிப்பிட்டபோது, நெஞ்சம் கனத்தது.

பண்ணிரெண்டாவது மட்டுமே முடித்திருந்த மனைவியை ஊக்கப்படுத்தி, அவர்கள் ஈரோட்டில் தங்கி செவிலியர் படிப்பு பயில பணம் கட்டிவருகிறார். எங்களுக்கு ஏற்கெனவே அவர் மீது இருந்த மரியாதை இன்னும் கூடியது.

மனைவிக்கு முன்பு கடவுள் நம்பிக்கை அதிகம் இருந்ததாம். இவருக்கு அவ்வளவு பற்றுதல் இல்லையென்றாலும், அவர்களின் விருப்பங்களை மதிப்பதற்காக , கோயிலுக்கு அவர்களுடன் செல்வாராம். தன் மனைவியிடம் அவர், ‘ நான் உன்னைக் கட்டுப்படுத்த மாட்டேன், உனக்கு எப்படி வேண்டுமானாலும் நடந்துக்கொள் ‘ என்றும் கூறிவிட்டாராம். இக்கட்டத்தில் எனக்கு அவரை மிகவும் பிடித்துப்போய்விட்டது. ஆண் – பெண் சமத்துவத்துக்கு இப்படி ஒரு அழகிய உதாரணம் பல துயரங்களுக்கிடையில் உதித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியடையச் செய்தது.

‘ ஆனால் இப்பொழுது என் மனைவி என்னைவிட முற்போக்குவாதி ஆகி விட்டார்கள். ஏதாவது தட்டிக்கேட்டால், என்னை விவாகரத்து செய்துவிடுவதாக சொல்கிறார்கள் ‘ என்று சிரித்துக்கொண்டே சொன்னார். அந்த சிரிப்பில், அவர் தன் மனைவி மீது வைத்திருந்த அன்பு, மரியாதை மற்றும் அரவணைப்பு ததும்பியது. வேதனையுடன் தொடர்ந்த கதை, எதிர்க்காலத்தை குறித்து நம்பிக்கையளிப்பதாக மாறியிருந்தது.

இரவில் ஒரு உணவகத்தில் எல்லோரும் சாப்பிட்டு கொண்டிருந்தோம். திடீரென மின்வசதி துண்டிக்கப்பட்டு, காரிருள் சூழ்ந்தது. என்ன செய்வதென்று தெரியாமல் நாங்கள் தவிக்க, மூர்த்தி அண்ணன் தன் கைபேசி வெளிச்சத்தை எங்களிடம் திருப்பி, மின்வசதி வரும்வரை அங்கேயே எங்களுக்காக நின்றுகொண்டிருந்தார். பிறகு நான் நன்றியைத் தெரிவிக்க, என்னை பார்த்து அவர் புன்னகைத்தார்.

அத்தருணத்தில், அவருடனான சந்திப்பு, ஏதோ ஒரு வகையில் என்னை மாற்றிவிட்டதாக உணர்ந்தேன். அவர், எளிதில் மறக்கக்கூடிய மனிதரல்லவே!

..